Text Box:  4. குளு குளு கோயமுத்தூர்

 

உமாபதியும் நானும் இப்போது உமி பிரியாத நண்பர்கள் ஆகி விட்டோம். "சார்" என்று அவர் குரல் கேட்டதுமே, "சரி போகலாமே" என்ற அளவுக்கு வளர்ந்து விட்டது எங்கள் நட்பு. அதனால் தான் 'இணை பிரியாத' என்று சொல்ல வந்த நான் 'உமி பிரியாத' என்று சொல்லி விட்டேன். இருந்தாலும் இந்த தடவை அவர் கூப்பிட்டதும், "எங்கெ சார் மறுபடியும் குப்பு தெருவுக்கா?" என்று அலுப்புடன் கேட்டேன்.

என் மனதில் உள்ளதை புரிந்து கொள்ளவா முடியாது உமாபதிக்கு? உடனே அவர் கேட்டார், "ஏன் சார், போர் அடிச்சிடுச்சா? வாங்க வெளியூர் போயிட்டு வரலாம்.   நம்ம மாகாணமா இல்லே வெளி மாகாணமா?  எங்க போகணும் சொல்லுங்க."

"
முதல்லெ நம்ம மாகாணத்துலே எதாவது ஒரு ஊருக்கு போயிட்டு வரலாம்."

"
வாங்க அப்படியே செய்வோம். குளு குளுன்னு கோயமுத்தூர் போயிட்டு வரலாம். சென்னைலே தான் வெய்யில் ஆளெ வேர்வையா உருக்கி தள்ளிடுதே."

"
அங்கே யாரு இருக்காங்க ஒங்களுக்கு தெரிஞ்சவங்க?"

"
நம்ம தமிழ் வாத்தியார் கோபால ஐயர், அதான் சார், ஒரு டுடொரியல் காலேஜ் வெச்சு இப்போ லட்ச லட்சமா சம்பதிக்கராரே, அவரு பையன் கிருஷ்ணா அங்கெ கம்ப்யூடர் எஞ்சினியரா இருக்கான். அவன் ஏ.பீ.சீ. காம்ப்யுடெக்னு ஒரு கம்பெனிலெ நம்ம ஊருலேதான் வேலைக்கு சேந்தான். அவன் சேந்த ஆறு  மாசத்துக்குள்ளெ அந்த கம்பெனி கோயமுத்தூர்லெ ஒரு ப்ரான்ச் ஓபன் பண்ணி அவனே அங்கே மேனேஜரா போஸ்ட் பண்ணிட்டாங்க. அவன் சேந்த ஆறு மாசத்துலெயே இன்னும் ஒண்ணும் நடந்திரிச்சு.”

"
என்ன நடந்துது?"

ஏ.பீ.சீ. காம்ப்யுடெக்லெ எம். சி.ஏ. படிச்ச ராதாங்கர ஒரு பொண்ணு வேலைக்கு சேந்தா. போரச்செ வரச்சே, 'ஹௌ ஆர் யு மிஸ் ராதா? நீங்க போன வாரம் எழுதின ப்ரொக்ரேம் ஒரு க்ரேட் ப்ரொக்ரேம். ப்ரமாதமா வேலை செய்யறதாம். கஸ்டமர் ரொம்பவே ஹேப்பியா இருக்கார்' என்று அவ்வப்போது அன்பு வார்தைகளைக் கொட்டிவந்தான். ஓரே மாசத்திற்குள் ஒரு நாள், 'ராட், நாம ரெண்டுபெரும் ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது? ஒன்னெ எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு', என்றும் கேட்டு விட்டான். ராதா பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டு லேசாக சிரித்தாள். கம்ப்யூடர் யுகமாச்சே. கேட்கவா வேணும். மறு நாளே இருவரும் அவரவர் வீடில் இந்த விவரத்தைச் சொல்ல, வெடித்தது வேட்டு. ஆஹாசத்துக்கும் பூமிக்குமா எகிறிக்  குதித்தார்கள் இருவரது அப்பா அம்மாக்களும். இவ்வளவுக்கும் இரண்டு குடும்பமுமே ஒரே ஜாதிதான். மாகாணம் தான் வேற வேற.”

"
அப்பறம்?"

"
அப்புரம் என்ன விழுப்புரம்? ஆத்து வெள்ளத்தெ அருகம் புல்ல வெச்சு அணை போடமுடியுமா? இல்லெ கடல் வெள்ளத்தெ கரை போட்டுத் தடுக்க முடியுமா? வீட்டுலெ ஒத்துக்காட்டி என்ன? ஃப்ரெண்ட்ஸ் தான் இருக்காங்களே. அவங்க உதவியோட ரெஜிஸ்ட்றார் ஆஃபீஸுலே மறு வாரமே நடந்திச்சு அவங்க கல்யாணம்.


தாலி கட்டி ஒரு வாரத்துக்குள்ளெயே ப்ரொமோஷனும் ட்ரன்ஸ்ஃபரும் வந்துடிச்சு கிருஷ்ணாவுக்கு. அவன் அதிருஷ்டம் பாருங்க. கோயமுத்தூர் ஆஃபிசுக்கு ஸ்டாஃப் செலெக்ட் பண்றப்போ ராதாவையும் செலெக்ட் பண்ணிட்டாங்க. ஏன்னா அவங்க கம்பெனி ஹெச்.ஆர்.டி. மேனேஜரோட தியரி படி சொந்த ஊருக்கு பக்கத்திலே போஸ்ட் பண்ணாக்க ஸ்டாஃப் நல்லாவே வேலை செய்வங்கங்கறது. ராதா ஊரு தான் குருவயூராச்சே. வாங்க போய் கிருஷ்ணனும் ராதையும் எப்படி இருக்காங்க பாத்தூட்டு வரலாம்."

"
காசா பணமா? கிளம்பலாம்,", என்றேன் நான்.

ராம் நகர்லெ ஒரு பெரிய பங்களா. கேட்டைத் தாண்டி உள்ளே போனால் வித விதமான பூச்செடிகள். போர்டிகோவில் பாலிஷ் போடாத பவுன் நிறத்துலெ ஒரு ஹோண்டா சிவிக் கார். ஊள்ளே போகிறோம்.

"
க்ரிஷ், நாம ரெண்டு பேரும் சேந்து சினிமா பாத்து ரொம்ப நாளாச்சு இல்லே? மொழி சினிமா 6-30 ஷோ பாத்தூட்டு அப்படியே அலங்கார்லேயோ, அன்னபூர்ணாலேயோ டின்னர் சாப்டூட்டு வந்துடலாமா?"

"
ஓகே, ராட் டியர். நீ கேட்டு எப்போ நான் இல்லேன்னு சொல்லிருக்கேன்?" இருவரும் கிளம்பினர் ட்ரெஸ்ஸை மாத்திக்கொண்டு.

மறு நாள் காலை. அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டு இருக்கிறான் கிருஷ்ணா ஆஃபீஸுக்கு. ராதா தயார் ஆகவில்லை. ஏன், படுக்கையை விட்டே கூட எழுந்திருக்கவில்லை. கிருஷ்ணா ரெண்டு மூன்று தரம் கூப்பிடவே மெதுவாக எழுந்திருந்து சுவற்றைப் பிடித்துக்கொண்டே நடக்கிறாள் ராதா பாத்ரூமை நோக்கி. அப்போது திடீரென்று, 'ஹேவ்..ஹேவ்..' என்ற சப்தம் கேட்கிறது. கிருஷ்ணா, "என்ன ஆச்சு டியர்?" என்று கேட்டுக் கொண்டு அவள் அருகே வருவதர்குள் வாயிலெடுக்கிறாள் குடம் குடமாக ராதா.

"
இதுக்குதான், இந்த ஹோடல் சாப்பாடுன்னாலே பிடிக்கறது இல்லே எனக்கு. இப்பொ பாரு நீ சஃபர் பண்றே," என்றான் கிருஷ்ணா.

"
இல்லெ க்ரிஷ். எனக்கு இது அஜீர்ணத்தினாலெ இல்லேன்னு தோண்றது. பத்து பதினஞ்சு நாளாவெ ஒரே அசதியா இருந்துது. அப்பொப்போ தலே சுத்தலும் இருந்துது."

"
என்ன சொல்றெ நீ? அதுக்குள்ளயா?" வெட்கமும் புன்சிரிப்பும் முகத்தில் தோன்ற தலையைக் குனிந்து கொண்டாள் ராதா.

பஞ்சும் நெருப்பும் பக்கத்துலெ பக்கத்துலெ இருந்தா பத்திக்காமலா போகும்? இது எங்கள் இருவர் மனதில் தோன்றிய கேள்வி.

"
ராட் டியர், நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. ஆஃபிசுக்கு வரவேண்டாம். சாயங்காலம் வந்ததும் டாக்டர் கிட்டே அழைச்சிண்டு போறேன். ஒனக்கு ப்ரேக்ஃபாஸ்டும் லன்ச்சும் பண்ணி வெச்சுட்டு போறேன்." சற்று நேரத்துக்குப் பின், "பை", என்று சொல்லிக் கொண்டு காரை ஸ்டார்ட் செய்தான் கிருஷ்ணா.

அன்று சாயங்காலம். லலிதா நர்சிங்க் ஹோமில் "கங்க்ரேசுலஷன்ஸ், மிஸ்டர் க்ரிஷ்ணன்!" என்கிறாள் டாக்டர் லலிதா, க்ரிஷ்ணாவைப் பார்து. "ஓடம்பு முடியலென்னு சும்மா படுத்துண்டு இருக்க கூடாது. அதுக்குன்னு ஓவரா ஸ்டெரைன் பண்ணிக்கவும் கூடாது. இந்த டானிக்கெ எல்லாம் ஒழுங்கா சாப்பிடணும். ஆனா தலவலி வந்தாக்கூட என்ன கேக்காமெ எந்த மருந்தயும் சாப்பிடக்கூடாது. சரியா?" என்றாள் டாக்டர் லலிதா, ரதாவை பார்த்து, அவள் கையில் ஒரு சீட்டைக் கொடுத்தபடி. "தேங்க் யு டாக்டர்," என்று சொல்லி இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

பதினைந்து நாட்களுக்குப் பிறகு.

"
வர வர எனக்கு ஒடம்பு முடியவே இல்லே க்ரிஷ்."

"
ஒத்தாசைக்கு யாரை நாம கூப்பிட முடியும்? நம்ம ரெண்டுபேர் வீட்டுலேயுந்தான் கோபமா இருப்பாளே?"

"
வருவா. வருவா. கட்டாயம் வருவா."

"
வருவாளா? யாரு வருவா? அதெப்படி அவ்வளோ ஷ்யூரா சொல்ரே?"

"
இன்னிக்கி எங்க அம்மா கிட்டே பேசினேன். என்ன சொன்னா தெரியுமா?"

"
என்ன சொன்னா?"

"
அம்மா சொல்றா, 'நீ கல்யாணமாகி போனதிலேருந்து ஒன் ஞாபகமாவே இருக்குடி, அங்கெ நீ என்ன கஷ்ட படறயோன்னு. இப்பொ நீ சொன்ன விஷயம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குடி. ஒனக்கு ஒத்தாசைக்கு வேணும்னா சொல்லு. அடுத்த பஸ்லெ ஏறி வரே'ங்கறா. எதுக்கும் மாப்ளெயும் ஒரு வார்த்தெ கேட்டுடு' ங்கறா."

"
அப்பா?"

"
அப்பா வரமுடியதாம். பொறந்தது லேருந்து என் க்ரிஷ்ணனை காலம்பரெயும் சாயந்திரமும் பாத்துண்டு இருக்கேன். கடைசி மட்டும் என் குருவயூரப்பனை பாத்தூட்டு போய்ச் சேரரேங்கராளாம்."

"
சாப்பாட்டுக்கு அப்பா என்ன பண்ணுவா?"

"
அதுவும் கேட்டேன். பக்கத்தாத்து பத்மா மாமி ரசம், சாம்பார், கரி தருவாளாம். அப்பா சாதம் மட்டும் வெச்சுப்பாளாம். அப்பாக்கு அது ஒண்ணு மட்டும் தெரியுமாம்."

"
அம்மா தனியா பஸ்லே எல்லாம் வர வேண்டாம். வர ஸண்டே நான் கார்லே போய் அழெச்சுண்டு வந்துடறேன்."

"
சரி க்ரிஷ். நான் அப்படியே அம்மா கிட்டே சொல்லிடறேன்."

ஸண்டேயும் வந்தது. ராதையின் (அப்படித்தான் அவர்கள் வீட்டில் கூப்பிடுவார்கள் கிருஷ்ணனின் ராதாவை) அம்மாவும் வந்தாள். கூடவே வந்தன நேந்திரன் காய் வறுவல், பலாச்சொளை வறுவல், மற்றும் மரவள்ளிக் கிழங்கு, வறுவல், உப்பாலும் வெல்லப்பகாலும் சுவை கூட்டியதாக.

திங்கட் கிழமை சமயலில் காளன். செவ்வாய் ஓளன். புதன் கிழமை அவியல். வியாழன் சேனை எரிச்சேரி. வெள்ளி புளிச்சேரி. தினம் ஒரு ஸ்வீட், அதான் ப்ரதமன். ஓரு நாள் கடலை பருப்புப் ப்ரதமன். மறு நாள் சக்கைப் ப்ரதமன். மூன்றாம் நாள் அடைப் ப்ரதமன். இவையே மாரி மாரி வந்தன. தேவாம்ருதமாக இருந்தது ராதாவுக்கு. க்ரிஷ்ணாவுக்கு? பதினைந்து நாட்களில் போரடித்து விட்டது. பிஞ்சு கத்தரிக்காய் கரி, ரசவாங்கி,  இள வெண்டைக்காய் கரி, பொடாடோ ரோஸ்ட், முருங்கைக்காய் பொரிச்சக் கூட்டு, சாம்பார், வத்தல் குழம்பு, ஊட்டி கோஸ், கேரட், பட்டாணின்னு சாப்பிட்டு நாக்கை வளர்த்துக் கொண்டவன் இல்லயா அவன் ?

Text Box:  Text Box:           

“…பூசனிக்காயயும் ……………………சேனைக் கிழங்கயும்  விட்டா......

 

ஓரு நாள் கேட்டான், "ராட், ஒங்க அம்மாவுக்கு இந்த பூசனிக் காயையும் சேனைக் கிழங்கயும் விட்டா வேறே கறிகாயே சமைக்கத் தெரியாதா?", என்று.

"
அதெப்படி அப்படி சொல்றே க்ரிஷ்? மத்தன் எவ்வளோ டேஸ்டி தெரியுமா?"

"
டேஸ்டியா? பூசனிக்காயெப்போல ஒரு உருப்படி இல்லாத காயே கெடையாது. அம்மாவாசைக்கு த்ரிஷ்டி கழிக்கதான் லாயக்கு அது."

"
இதெ கல்யாணத்துக்கு முன்னாடியே யோசிச்சு இருக்கணும்."

"
என்ன சொல்றே நீ? கல்யாணத்துக்கும் பூசனிக்காய்க்கும் என்ன சம்பந்தம் இருக்கு?"

"
இருக்கே.".

"
என்ன இருக்கு?"

"
எங்க கேரளாக் காராளுக்கு மத்தன்னா உசுரு."

"
அதென்னா? கேரளா, தமிழ் நாடுன்னு பிரிச்சுப் பிரிச்சுப் பேசறே?"

"
இதுக்குதான் சொன்னா எங்க அப்பா அம்மா அப்பொவே, 'வாண்டாண்டீ, உட்டுடுடீ' ந்னு." அதற்குமேல் பேசவில்லை ராதா. விர்ரென்று போய் கட்டிலில் படுத்துக்கொண்டாள். கிருஷ்ணனும் போனான் படுக்க, ஆனால் முகம் மறுபுரம் திருப்பிக்கொண்டு படுத்தான்.

மறு நாள் காலை. சீக்கிரமே எழுந்த கிருஷ்ணன்,  குளித்து ட்ரெஸ்ஸ் செய்து கொண்டு, "ஆஃபீசுலே ஒரு இம்பார்டன்ட் மீடிங்க் இருக்கு ஏழரை மணிக்கே. நீ அப்புரமா டேக்ஸி வெச்சுண்டு ஆஃபீஸ் வந்துடு," என்று வழக்கமாக உபயோகிக்கும் 'ராட் டியர்' என்ற வார்த்தையை கூட தவிர்த்து. கையில் ப்ரீஃப் கேஸுடன் விர்ரென்று போய் காரில் ஏறிக்கொண்டான். ராதாவின் கண்களில் கண்ணீர் மடை திறந்தாற்போல் வந்தது.

"
என்ன உமாபதி சார். சந்தோஷமா இருக்கற காதல் ஜோடிய பாக்கப் போறோம்னு இங்கெ வந்தா இப்படி இருக்கே?" என்றேன் நான்.

"
அவசரப்  படாதிங்க, என்ன ஆகுதுன்னு இருந்து பாத்தூட்டு போகலாம்."

உமாபதி பேச்சைத் தட்டவா முடியும்?

"
ராதே, என்னம்மா ஆச்சு? என்ன கோபம் மாப்ளெக்கு?"

முகத்தை சட்டென்று திருப்பி துப்பட்டாவினால் கண்களில் தளும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் ராதா. "கோபம் ஒண்ணும் இல்லெம்மா,". என்றாள் அவள்.

"
மழுப்பாதேடி. ஓண்ணுமில்லயா? நீங்க பேசிண்டு இருந்ததெல்லாம் பக்கத்து ரூம்லெ இருந்த நான் நன்னா கேட்டுண்டு தான் இருந்தேன்."

"
அம்மா, மாப்பிள்ளைக்கு ஒன் சமயல் பிடிக்கலயாம்."

"
மாப்ளெக்கு என் சமயல் புடிக்கலேன்னா என்ன? நான் இன்னிக்கே குருவாயூர் போறேன். பாவம் அப்பாவுந்தான் எவ்வொளோ நாள் தனியா கஷ்டப்பட்டுண்டு இருப்பா சாப்பாட்டுக்கு? மாப்ளெ என்ன கார்லெ கொண்டு உடணும்னு இல்லே. பஸ் ஸ்டாண்ட்லெ கொண்டுபோய் உட்டூட்டா நான் பஸ் ஏறி  போய்டுவேன்.

அன்று சாயங்காலம்.

"
அம்மா ஊருக்குப் போகணுமாம் க்ரிஷ்."

"
இப்பொ என்ன திடீர்னு அவசரம்?"

"
அப்பாவுக்கு உடம்பு சரியில்லயாம். ஃபோன் வந்துதாம். ஒனக்கு சண்டே தான் ஃப்ரீயா இருக்கும். அதுவர காத்துண்டு இருக்கணும்னா நாளாயுடும். பஸ்லே ஏத்தி உட்டூட்டா நானே போய்டுவேங்கரா."

"
சரி, காலம்பர கொண்டுபோய் ஏத்தி உடறேன்."

இது நடந்து இரு வாரங்களுக்குப்பின்.

"
க்ரிஷ்."

"
யெஸ், டியர்."

"
என்னாலெ முடியவே இல்லெ, ஒத்தாசைக்கு யாரையாவது..." என்று இழுத்தாள் ராதா.

"
யாரைக் கூப்பிட முடியும்?"

"
ஒங்க அம்மாவை...."

அவள் சொல்ல வந்ததை பூராக சொல்லிமுடிக்க வில்லை. அதற்குள் க்ரிஷ்ணா, இப்பொவே ஃபோன் பண்ணிப் பாக்கறேன்.”

சென்னைக்கு ஒரு எஸ்டிடி போடுகிறான்.

"
ஹல்லோ."

"
யாரு பேசறது?"

"
நான் கமலம் பேசறேன். நீங்க யாரு? யாரு வேணும் உங்களுக்கு?"

"
அம்மா. நான் க்ரிஷ்ணா பேசறேம்மா. குரல் தெரியலயா அம்மா?"

"
சும்மா வெளையாட்டுக்குத் தாண்டா யாரு நீங்கன்னு கேட்டேன். கொரல் மறந்து போகுமாடா? இருபத்தெட்டு வருஷம் கேட்ட கொரல் ஆச்சேடா அது. இப்பொ வாணா ஒரு நாலஞ்சு மாசமா அதை நீ எங்களுக்கு காட்டலே. எப்படிடா இருக்கே? ராதா எப்படி இருக்கா?"

"
நாங்க நன்னா இருக்கோம்மா. நீ எப்படி இருக்கே? அப்பா எப்படி இருக்கா? அப்பாக்கு என் மேல இன்னும் கோபம் தணியலெயா அம்மா?"

"
அம்மா..."

"
என்னடா சொல்லு."

"
அம்மா...."

"
சொல்லுடா."

"
அப்பாவும் நீங்களும் தாதா பாட்டி ஆகப் போறேள்மா இன்னும் அஞ்சே மாசத்துலே."

"
அப்படியாடா? இரு அப்பாகிட்ட தரேன் ஃபோனே. நீயே சொல்லு அப்பாகிட்டே."

"
ஹல்லோ...யாரு பேசறது?"

"
நான் தான் க்ரிஷ்ணா பேசறேம்பா."

"
என்ன? இருக்காளா போய்ட்டேளான்னு கேக்கணும்னு ஃபோன் பண்றயா?"

"
எம்மேல இன்னும் கோபம் தணியலயாப்பா? நான் பண்ணது பெரிய தப்புதாம்பா."

"
படவா. போருண்டா நீ மன்னிப்பு கேக்கறது. நானும்தான் சின்ன வயசிலெ காதல் பண்ணனும்னு பாத்தேன். எங்கப்பா என்னவிட இன்னும் பிடிவாதக் காரர். கட்டுடா படவா  தாலியென்னார். நானும் கட்டினேன் பேசாமெ தாலியே,  ஒங்கம்மா கழுத்துலே. என்ன ஒண்ணு.  நான் காதல் பண்ணப் பாத்தது ஒங்க அம்மாவைத்தான்." இரு முனயிலும் பெரிதாக சிரிப்பொலி.

அப்பா தொடர்ந்தார். "சரி இப்போ என்னடா திடீர்னு ஃபோன் பண்றே? நீ எப்படி இருக்கே? ராதா எப்படி இருக்கா? வேலையெல்லாம் எப்படி போயிண்டு இருக்கு?" சரமாரியாக கேள்விக்கணைகள்.

"
அப்பா....வந்து..."

"
என்னடா வந்தும் வராததும்?"

"
நீ தாத்தா ஆகப்போறேப்பா."

"
அட்ரா சக்கைன்னானா. எப்போடா?"

"
இன்னும் அஞ்சு மாசத்துலேப்பா."

"
டேய், க்ரிஷ்ணா இப்பொதான் ராதாவெ ஜாக்ரதையா பாத்துக்கணும். நான் ஒண்ணு பண்றேன். நாளைக்கு ஃபஸ்ட் ஃப்ளைட்லெ அம்மாவை அனுப்பறேன் ஒத்தாசைக்கு. நீ ஏர் போர்ட் போய் அவளெ அழச்சிண்டு போய்டு."

"
சரிப்பா. ஆனா நீங்க என்னப்பா பண்ணுவேள் சாப்பாட்டுக்கு?"

"
மெட்ராஸ்லெ கெடைக்காத சாப்பாடாடா? ஃபோன் பண்ணா ருசி ருசியா வீட்டுலெ கொண்டுவந்து கொடுக்கறான். நான் பாத்துக்கறேன். நீ ராதாவெ பாத்துக்கொ. இப்பொ ஃபோன கட் பண்ணு. நான் கம்ப்யூடர்லெ டிக்கெட் புக் பண்ணணும்."

"
பை…. பா."

சமயலறைக்கு ஓடுகிறான் க்ரிஷ்ணா. "ராட் டியர், க்ரேட் ந்யூஸ்! அம்மா நாளெ காலம்பர ஃபஸ்ட் ஃப்ளைட்லெ வரா."

"
அப்படியா? என் மேல கோபமா இருப்பாளா க்ரிஷ்?"

"
அதெல்லம் ஒண்ணும் இல்லேடா.”

மறு நாள் காலை ஒன்பது மணிக்கு க்ரிஷ்ணனின் அம்மா வந்து இறங்குகிறாள் காரிலிருந்து. அம்மவின் சாஃப்ட் லக்கேஜ் பெட்டி ஒன்றையும் கூடவே ஒரு அட்டை பெட்டியையும் உள்ளெ கொண்டு வருகிறான் க்ரிஷ்ணா.

"
வாங்கோம்மா", வாய் நெறஞ்சு கூப்பிடுகிராள் ராதா.

"
அந்த அட்டை பெட்டிய மொதல்ல ஓபன் பண்ணுடா."

க்ரிஷ்ணா திறக்க,  அதிலிருந்து ஒரு ஸ்வீட் பாக்ஸை எடுத்துப் பிரித்து ஒரு க்ரேண்ட் ஸ்வீட்ஸ் ஜாங்கிரியை ராதா கையில் கொடுத்து, "சாப்பிடும்மா. ரொம்ப சந்தொஷமான ந்யூஸ் சொல்லியிருக்கேள். ராதா ஒன்னெ நான் இதுக்குமுன்னாடி பார்த்தது இல்லே. ஆனாலும் நீ இப்படிதான் ஸ்ரீதேவி மாதிரி நல்ல களையா இருப்பேன்னு நெனெச்சிண்டு இருப்பேன். ஏன்னா எங்க க்ரிஷ்ணாவுக்கு கொழந்தைலே இருந்தே எதுலெயும் நன்னா இருக்கறது தான் தனக்கு வேணும்னு ஒரு பிடிவாதம் உண்டு. அவன் செலெக்ஷன்னா எப்படி இருக்கும்னு தெரியாதா என்ன எனக்கு? ஆமா, நீ ஏன் இப்படி ரத்த சோகை வந்தாப்ளெ வெளுத்து எளெச்சு போயிருக்கே. பாவம் வாயும் வயுறுமா இருக்கற பொண்ணுக்கு வாய்க்கு ருசியாவும் சத்தாவும் சமைச்சுப் போட வாணாமோ?"

"
அதெல்லாம் ஒண்ணும் இல்லெம்மா. நீங்க மொதல்ல உள்ளெ வாங்கோ. காஃபீ சூடா வெச்சிருக்கேன். சாப்டூட்டு அப்பறமா பேசலாம் நிதானமா", என்று சொல்லிக்கொண்டே சமயல் உள்ளுக்கு சென்றாள் ராதா காஃபியை எடுத்துவர.

அடுத்த பத்து நாட்கள் வித விதமாக சமயல், டிஃபன். சாயங்காலமானால் போருர் கோவில், ப்ரின்ஸ் ஜ்வெல்லரி, தாரக்ராம் சில்க் ஹௌஸ், சினிமா, ட்ராமா, கச்சேரின்னு பொழுது ரொம்பவே சந்தோஷமாக போய்கொண்டு இருந்தது.

ஒரு நாள் மாலை. க்ரிஷ்ணா காரிலிருந்து இறங்கும் போது அம்மா வாசல் படியிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள். அன்று உடம்பு சரியில்லை என்று ராதா ஆஃபீசுக்குப் போகவில்லை. அம்மாவை பார்த்ததும் பதட்டத்துடன் கேட்டான் க்ரிஷ்ணா, "அம்மா என்னம்மா ஆச்சு?  இங்கெ ஒக்காந்துண்டு இருக்கே?"

"
எனக்கு நாளைக்கே மெட்ராஸுக்கு டிக்கெட் வாங்கிண்டு வாடா."

"
என்ன ஆச்சும்மா?"

"
உன் பொண்டாட்டி தான் எனக்கு புத்தி மட்டுன்னுட்டாளே. நான் எதுக்கு இங்கே இன்னும் இருக்கணும்?"

"
ஐயோ அம்மா, மலயாளத்துலே புத்தி மொட்டு, அது மட்டு இல்லே மொட்டு, அப்படின்னு சொன்னா ரொம்ப சிரமம்னு அர்த்தம்மா."

"
அப்படியாடா? எனக்கு அப்பவே சந்தேகமா இருந்துது. ராதா நல்ல பொண்ணாச்சேன்னு. அவொ ஒண்ணும் தப்பா பேசி இருக்க மாட்டானு தான் தோணிண்டு இருந்துது."

"
ஆமாம்மா. சரி இந்த பாக்ஸெ உள்ளே கொண்டு வெச்சுடு. நான் அவசரமா ஒருத்தர பாக்கணும். பாத்தூட்டு வந்துடறேன்," என்று சொல்லிக் கொண்டு தனது ப்ரீஃப் கேஸை அம்மாவிடம் கொடுத்தான்.

இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பிய க்ரிஷ்ணாவுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி. வாசல் கதவு திறந்தே இருந்தது. என்ன ஆச்சோ என்னவோ என்று பயந்து கொண்டே உள்ளே போனால் அவன் கண்ட காட்சி ?  ஓரு நாற்காலியில் ராதா. கீழே தரையில் அம்மா. ராதாவின் வலது கை விரல்கள் விரித்த நிலையில் ஆகாசத்தை நோக்கி. ஓவ்வொரு விரல் நுனியிலும் கரும் பச்சை நிறத்தில் ஒரு குல்லாய். உள்ளங்கையில் ஒரு வட்ட கரும் பச்சை பேஸ்ட். இடது கையை அம்மா தன் இடது கையால் பிடித்துக்கொண்டு இருக்கிறாள். அம்மாவின் வலது கையில் அதே கரும் பச்சை பேஸ்ட் உருண்டை.

"
அம்மா என்னம்மா இது?"

"
ஏண்டா. புள்ளத்தாச்சி பொண்ணு. அவளுக்கு வளெகாப்பு சீமந்தம் எல்லாம் பண்ண வேண்டாமா ? அப்பொ அவோ கை அழகா இருக்க வாண்டாம் ?"


       “…ராதாவின் இடது கையை அம்மா தன் இடது கையால்...

 

Text Box:  Text Box:   

    “…வளைகாப்பு சீமந்தம்னு...         ...கை அழகா இருக்க...

     

"அம்மா. நீ ஏதோ டிக்க..." அவன் முடிக்க வில்லை கேட்க வந்ததை.

"
யாருக்கு வேணும்டா உன் டிக்கட்டும் இக்கட்டும். கொண்டுபோய் குப்பெலெ போடு."

"
அம்மா....!"

"
சார், வாங்க. நாம போகலாம் சென்னைக்கு.  அம்மா இப்போதைக்கு வர மாட்டாங்க."  கிளம்புகிறோம்  நாங்கள்.