அழியவிருக்கும் ஒரு பற்வையைக் காப்பாற்ற : (4) கல்பொருக்கி

 

தஞ்சாவூர் திருச்சி சாலையில் ஒரு சிறுவன் ஒரு கையில் உண்டிவில்லும் மற்றொரு கையில் ஒரு பறவையுமாகச் சென்று கொண்டிருந்தான்.  அவன் அருகே சென்ற போது தெரிந்தது அவன் கையில் தொங்கிக் கொண்டிருந்தது ஒரு இறக்கை ஒடிந்த கல்பொருக்கி  (நிற்காமல் ஒரே முச்சில் 3000 மைல்கள் பறந்து உலக சாதனை படைக்கும் கோல்டன் ப்ளோவர்) என்று.

 

சிறுவனிடம், அந்தப் பறவையை விட்டுவிடுஎனக் கேட்டதற்கு, நான் ஏன் விடவேண்டும்?  நான் வேட்டையாடிப் பிடிதது இருக்கிறேன்”, என்றான்.  ஐந்து ரூபாய் தருகிறேன் எனக்குத் தா என்றேன்.  போதாது என்றான்.  பத்து ரூபாய் கொடுத்தேன்.  பறவை கை மாறியது.

 

வீட்டிற்கு வந்ததும் என்னிடம் இருந்த கிருமி நாசினி மருந்தை காயத்தில் தடவி நடுக் கூடத்தில் ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்தேன்.  என்றுமே வராத பூனை ஒன்று வீட்டிற்குள் வந்து விட்டது.  பூனையை விரட்டி விட்டு செஸ்ட் ஆஃப் டிராயரில் ஒரு அறையைக் காலி செய்து அதற்குள் பத்திரமாகக் கல் பொருக்கியை வைத்தேன்.

 

மறு நாள் காலை கல் பொருக்கியைத் தோட்டத்தில் விட்டேன்.  அது நேராக நீர் தங்கியிருந்த ஓர் பள்ளத்துக்குச் சென்று மூன்று முறை தனது அலகினால் நீரைத் தொட்டுப் பார்துவிட்டுப் பின் நீரில் இறங்கிக் குளித்தது.  குளித்தபிறகு சிறகுகளை உதரி உபரி நீரை வெளியேற்றி அதன் பின் கற்களைப் புரட்டி இரை தேட ஆரம்பித்தது.  ஒரு நாளல்ல இரண்டு நாளல்ல.  என்வீட்டில் இருந்த பத்து நாட்களும் இதே வழக்கம்தான்.

 

கல்பொருக்கி குளிக்குமுன் நீரை அலகினால் தொட்டுப் பார்த்தது நீர் அருந்தவா அல்லது நீரின் உஷ்ணம் தான் குளிக்க ஏற்றதாக இருக்குமா என்று பார்க்கவா என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.  அது எப்படி இருந்தாலும் நாள் தவறாமல் அது குளிப்பதைப் பார்த்து என் மனைவி மற்றும் குழந்தைகளும், நானும் ரசித்து வந்தோம்.

 

    

கல்பொருக்கி குளிக்கிறது

 

ஒரு நாள் காலை கல்பொருக்கியின் அபயக் குரல் கேட்டது.  ஓடிப் போய் பார்த்தால் அதைச் சுற்றி இரண்டு மூன்று காகங்கள்,  காகங்களை விரட்டி விட்டு கல்பொருக்கியை உள்ளே கொண்டு வந்தேன்.  பிறகு இனி நான் அதை வைத்துக் கொள்வதில் அதற்கு ஆபத்துதான் அதிகம் என்று தோன்றவே காவிரி ஆற்றின் கரையில் இதே பொன்ற குளிர் நாட்களில் வலசை வரும் பல பறவைகள் இருக்கும் இடத்திற்குக் கொண்டு போய் விட்டு விட்டு வந்தேன்.  மற்ற பறவைகள் எல்லாம் பறக்கும் போது என் கல் பொருக்கி மட்டும் தத்தித் தத்தியே சென்று கொண்டிருந்தது பாவம்.  வலசை வந்த மற்றப் பறவைகள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் போது மூன்றடி கூடப் பறக்க முடியாத இந்தக் கல் பொருக்கியால் எங்கிருந்து மூவாயிரம் மைல்கள் பறக்க முடியும்?

 

என்னால் அதன் உயிரைத் தாற்காலீகமாகக் காப்பாற்ற முடிந்ததே தவிற நிரந்தரமாக அல்ல. 

 

ஆஸ்திரேலியாவில் டிவியில் காட்டப் படும் மிருக வைத்தியர்கள் என்ற தொடரைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றும் நம் நாட்டிலும் அவர்களைப் போன்ற ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட மிருக வைத்தியர்கள் இருந்தால் என் செல்லக் கல் பொருக்கியும் உயிர் பிழைத்திருக்குமோ என்று.

 

 

நடராஜன் கல்பட்டு

 

                                           

தொடரும்.